திங்கள், 27 ஏப்ரல், 2009

போரில் வெல்வதற்கு, முதலில் நிலத்தை இழ..!

எல்லா வழிகளிலும் பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, மூச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்ட ஈழ மக்கள் வேறு வழியின்றிப் போராடுகிறார்கள்.

அதே போல்தான் இஸ்ரேல் நாட்டின் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு தலைமை ஏற்றிருப்பது ‘ஹமாஸ்' என்ற விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை இந்தியா
அங்கீகரிக்கிறது. ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று பறைசாற்றுகிறது. பாலஸ்தீனிய ‘ஹமாஸ்' இயக்கத்தை அமெரிக்க, பிரிட்டன், கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கம்தான் தங்கள் தலைமை என்று வாக்கெடுப்பின் மூலமே பாலஸ்தீனிய மக்கள் அறிவித்திருக்கிறார்கள்.


அந்த அரசை நாமும் மதிக்கிறோம். ஈழத்தில் அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால் ஈழமும் இன்னொரு பாலஸ்தீனமாகும். அதற்கு சிங்கள இனவாத அரசு தயாரா?‘கிளி' வேண்டுமானால் வீழும் ஆனால் ‘புலி' வீழாது என்பதனை அவர்கள் விரைவிலேயே அறிந்து கொள்வார்கள். காடுகளையும் மலைகளையும் நடந்தே கடந்து சீனத்தை விடுதலை செய்த ‘மாவோ' அவர்களும் சில தேக்கங்களைச் சந்தித்தார். சில தடைகளை எதிர்கொண்டார். சில இடங்களில் தாற்காலிகமாகப் பின்வாங்கவும் செய்தார். அப்போது தமக்கு பின்னே அணிவகுத்து வரும் செஞ்சேனையைப் பார்த்துச் சொன்னார்.

‘இப்போது நிலத்தை இழ. போராளிகளை காப்பாற்று. இப்போதைக்கு நிலத்தை இழக்கத் தயங்கினால் பின்னர் நிலத்தையும் இழந்துவிடுவாய், போராளிகளையும் இழந்துவிடுவாய்' என்றார் மாவோ.

இன்றைக்கு வன்னி காடுகளில் ஈழப் போராளிகள் நிலங்களை இழக்கலாம். ஆனால் நாளை கொழும்பிலேயே மையம் கொள்ளும்.இலங்கையில் சம உரிமை மறுக்கப்பட்டதால் அரசுக்கு எதிராக விடுதலைப்புலிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சம உரிமை என்பது நியாயமான கோரிக்கையாகும். இதற்காக அறவழியில் போராடிப் பார்த்தனர். எந்த முடிவும் ஏற்படவில்லை. மனித நேயத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் அரசுக்கு எதிராக வேறு வழியின்றி ஆயுதப்போராட்டம் நடத்தும் அளவிற்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்படிருக்கிறார்கள்.

முத்தமிழ் வேந்தன்
சென்னை

கருத்துகள் இல்லை: