செவ்வாய், 5 மே, 2009

"இந்தியா தவறு செய்துவிட்டது!" சாடுகிறார் முன்னாள் இந்திய இராஜதந்திரி ராஜீவ் டோக்ரா



"சீனாவும் பாகிஸ்தானும் தங்களது நலனுக்கு வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கிவிட்டன. இறுதியில் இலங்கையினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் எங்களால் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் எமக்கு மனமில்லை" என்று இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான ராஜீவ் டோக்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று புதன்கிழமை 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

"உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டதாகவும் இல்லை. தட்டைத் தன்மை என்ற ஒன்று இருக்குமானால் அது அதன் மனச்சாட்சியில்தான் இருக்க வேண்டும். ஏனெனில் மாபெரும் மனிதப் பெருந்துன்பம் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, செத்துப் போன ஆன்மா மட்டுமே பாதிக்கப்படாமல் இருக்கும். உலகம் உண்மையிலேயே இணைக்கப்பட்டதாக இருக்கும் எனில் இந்தப் பயங்கரம் குறித்த செய்தி உலகில் எங்காவது எதிர்ப்பைத் தூண்டியிருக்கும், உலகின் 24 மணி நேர செய்தி ஊடகங்களில் ஒரு சிறு பகுதியாவது இலங்கையில் என்ன நடக்கிறது என்பது குறித்துச் சிறிய அளவாவது செய்தி வெளியிட்டிருக்கும்.

இன்னும் சுருங்கச் சொன்னால், இலங்கையின் சின்னஞ் சிறு பகுதியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து உலகம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கொடும் செயல்களை செய்து முன்னேறிக் கொண்டிருக்கும் சிறிலங்கா படையினால் அந்தப் பகுதி நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டிருக்கிறது.
சுருங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சிறிய நிலப் பகுதியில்தான், ஒரு காலத்தில் தன்னாட்சி குறித்த தமிழ் இளைஞர்களின் நம்பிக்கை சுடர் விட்டுக்கொண்டிருந்தது. இப்போது அந்தப் பகுதியில் வயதான ஆண்களும் பெண்களும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும்தான் இருக்கிறார்கள். இளைஞர்கள் அழிந்துவிட்டனர். தங்களின் தாயகக் கனவை தங்களுடன் வேறு உலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

தெய்வங்களுடன் தொடர்புகொள்வது கூட அவர்களுக்கு எளிதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த உலகில் உள்ள கடவுள்கள் கேளாக் காதினராகவும், பேசாத வாயினரதாகவும்தான் இருக்கின்றனர்.
உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நடுவர்போல அன்றாடம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அமெக்காவோ, பாகிஸ்தானை சரிக்கட்டுவதில்தான் மும்முரமாக இருக்கிறது.


சாதாரணமாக, எங்கேயாவது மனித உரிமைகள் மீறப்படுவதாக உறுதியற்ற செய்தி வந்தால்கூட வலுவான கண்டனங்கள் தெரிவிக்கப்படும். அமெரிக்க ஊடகங்கள் வெகுவிரைவாகச் செயற்படும். உண்மையான, கற்பனையான மனித உரிமை மீறல் செய்திகளை அச்சில் ஏற்றுவதற்காக தொன் கணக்கில் செய்தித்தாள் காகிதம் அர்ப்பணிக்கப்படும். பிறகு குற்றம் சாட்டப்பட்ட தரப்பு, அமெரிக்காவின் ஆணைப்படியான ஏற்பாட்டுக்கு அடிபணியும் வரையில், அனைத்துலக அரங்குகளுக்கோ மற்றவற்றுக்கோ இழுத்து வரப்படும். ஒரே ஒரு உயிர் போயிருந்தால் கூட, ஒரே ஒரு மனித உரிமை மீறல் நிகழ்ந்திருந்தால்கூட இவை எல்லாம் நடக்கும்.

ஆனால், இலங்கையில் நாள்தோறும் நடைபெறும் அடக்குமுறைகள் குறித்து எதையுமே பார்க்காதது போல, எதையுமே கேட்காதது போல அமெரிக்கா ஏன் நடிக்கிறது? இவ்வளவு நாட்களாக அமைதியாக இருக்கும்படி அதைத் தூண்டியது எது?.

அமெரிக்காவின் இந்த அக்கறையற்ற போக்குதான் ஐக்கிய நாடுகள் சபையின் செயலின்மைக்கும் காரணமாகும். அமெரிக்கா சைகை காட்டுமானால், ஐ.நா. கிளர்ந்தெழுந்து செயற்படும் என்பது உண்மைதான். அந்த ஒப்புதல் கிடைத்த உடனே, உலக ஆட்சிப்பணி அதிகாரிகள் மிகுந்த வேகத்துடன் செயற்படுவார்கள். அவர்கள் அதிகம்Œசாதிக்க முடியாவிட்டாலும் கூட, குற்றம் இழைக்கப்படும் நாட்டுக்குச் சென்று வருவார்கள், தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று வருவது, குறைந்தது உலகின் செய்தியையாவது அந்த நாட்டுக்குத் தெரிவிக்கும்.

உலகின் இந்த உயர்நிலை கவனம், அதைத் தொடர்ந்த ஊடகங்களின் பார்வையும் தடுப்புக்கேடயமாக மாறி குற்றம் இழைப்பவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கும், மனித உரிமை மீறல்களின் தீவிரத்தை ஓரளவுக்குக் குறைப்பதற்கும் உதவும்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இவை எதுவுமே நடக்கவில்லை. அக்கறையற்ற இந்தப் போக்குதான், சிறிலங்கா அரசை துணிச்சல் அடைய வைத்திருக்கிறது என்பது தெளிவு.

மேலும், இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும்படி கைவிடப்பட்டனர். தொடர்ச்சியான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள், நாள்தோறும் பலர் மடிவது என்பதே அங்கு நெறிமுறையாகிவிட்டது.

மனித உரிமை மீறல்களை உலகம் வகைப்படுத்துவதிலும் சாதி முறை இருக்கிறதோ என்று வியப்படைந்தால் அதுதான். இல்லாவிடில் பொஸ்னியா, கொசோவோ தொடர்பாக போர்க்கால நடவடிக்கை போன்ற செயற்பாட்டுக்கு உலகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? சேர்பியாவைப் பணிய வைப்பதற்காக அதன் மீது குண்டு வீசியது ஏன்? தமிழர்களின் இரத்தத்தை விடவும் வெள்ளையர்களின் இரத்தம் மதிப்பில் உயர்ந்ததோ? பின்னர் ஏன் உதவி கோரும் இலங்கைத் தமிழர்களின் கூக்குரல் உலகச சமுதாயத்தின் காதுகளில் விழவில்லை? இதில் இந்தியாவின் நிலை என்ன? நமக்கு பொறுப்பு இல்லையா?

புவியியல், வரலாறு, இனம், மொழி, மதம், பண்பாடு என அவர்களுடன் நமக்குள்ள அனைத்துத் தொடர்புகளும் அதைத்தானே வலியுறுத்துகின்றன. எப்போதேனும் அமைச்சர் ஒருவர் அரை மனதுடன் முயற்சி எடுப்பார். நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் ஒன்றை விடுப்பார். அதற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்பதுபோல சிறிலங்கா அரசு விரைவிலேயே அதை ஒதுக்கித் தள்ளிவிடும்.
இந்த முடிவு பிரபாகரனுக்கு வேண்டும் என்பது போன்ற பழிவாங்கும் பார்வையை நமது பார்வையாளர்களில் சிலர் கொண்டிருக்கிறார்கள். பிரபாகரனுக்கு எதிராக மட்டுமின்றி, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் எதிரான இந்த வாதத்தில் ஒருவேளை வலு இருக்கலாம். அவர்களுக்காக யாரும் வாதாடவில்லை. அவர்கள் விடயத்திலும்கூட அதேபோல அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வருகிறது.

மும்பாயில் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் காசப் செய்த குற்றங்களையும் படுகொலைகளையும் தொலைக்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்திருக்கின்ற நிலையில், வழக்கு விசாரணையில் அஜ்மல் காசப்புக்கு விரிவான வதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பது ஏன்? அஜ்மல் காசப்பும் அவனது கூட்டாளிகளும் இந்தியாவின் பொருளாதார அடித்தளத்துக்கே அறைகூவல் விடுத்தனர். 180 பேரை படுகொலை செய்தனர்.

எனினும் அஜ்மல் காசப்புக்கு அரசு”தரப்புக்கு எதிராகப் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்கும் மற்ற விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிட நாம் முடிவு செய்தாலும்கூட, பாதுகாப்பற்ற வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகளை நாம் எப்படி விட முடியும்? அவர்கள் மீது நமக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? அவர்களைப் பற்றி நாம் அக்கறைப்பட வேண்டியதில்லை என்று சிலர் வெட்கமின்றி வாதாடுகிறார்கள். நம்முடன் மரபுவழி உறவுள்ள இந்தியத் தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்குக் குடிபெயர்வதற்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர் என்றும், மற்றவர்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்கள், அவர்களிலும் பெரும்பகுதியினர் பயங்கவாதிகள், இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

உலகம் தட்டையாகவும் இல்லை, இணைக்கப்பட்டும் இல்லை என்பதற்கு இத்தகைய மனிதர்களே வாழும் எடுத்துக்காட்டு. நமது உலகம் மற்றவர்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டு பரிவு காட்டாத உணர்ச்சியற்ற உலகம் என்பதற்கு இவர்களே சான்று. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள உறவு வரலாற்று வழிப்பட்ட உறவு. அதுவே பலவழிகளிலும் அவர்கள்பால் நம்மைப் பொறுப்புள்ளவர்கள் ஆக்குகிறது. அத்தகையதொரு பொறுப்புணர்வை நிறைவேற்றும் வகையில்தான் இராமர் இலங்கைக்குச் சென்றார்.

வருந்தத்தக்க வகையில், இந்தியா அடிக்கடி அதன் சொந்த மக்களின் துன்பங்களைக் கண்டும் அசையாமல் இருந்து வருகிறது. இல்லாவிடில், உகண்டாவில் கொடுங்கோலன் இடி அமீனால் நமது மக்கள் ஒடுக்கப்பட்டபோது, நாம் அவர்களது உதவிக்குச் சென்றிருப்போம். பிஜித் தீவில் உள்ள இந்தியர்களுக்கு உதவி செய்திருப்போம். கரீபிய நாடுகளில் உள்ள இந்திய மரபுவழித் தமிழர்கள் இழிவுடன் நடத்தப்படுவதற்கு எதிராக உறுதியுடன் குரல் கொடுத்திருப்போம். அவர்களைப் போலவே, நமக்கு அண்டையில் உள்ள இலங்கைத் தமிழர்களையும் அவர்கள் விதிப்படி நடக்கட்டும் என்று கைவிட்டு விட்டோம்.

தேர்தல் மட்டும் வரவில்லை என்றால் அவர்கள் அப்படியேதான் விடப்பட்டிருப்பார்கள். திடீரென, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. பதிலுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களாக அது மேற்கொண்டு வந்த முயற்சிகள் பயன் அளித்துள்ளதாகக் கூறி வருகிறது.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசு”ஒப்புக் கொண்டுவிட்டதாக அது தெரிவித்துள்ளது.

தமிழர்கள் சிக்கியிருக்கும் பகுதி சிறிய பகுதியாகச் சுருங்கிவிட்டதால், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது தேவை இல்லை என்பதால், படை நடவடிக்கைகளின் அளவை சிறிலங்கா ஓரளவுக்குக் குறைத்துக் கொண்டுவிட்டது என்பதுதான் உண்மையான காரணம்.

நாம் நேர்மையானவர்களாக இருந்தால், அரசினுடைய நெருக்குதல் இலங்கையில் பயனளிக்கத் தொடங்கிவிட்டது என்பது உண்மையாக இருந்தால், இதைச் செய்வதற்கு இவ்வளவு காலம் அது ஏன் காத்திருந்தது? என்று மத்திய அரசிடம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுகிற, முடமாக்கப்படுகிற, விதவைகள் ஆக்கப்படுகிற, ஆதரவற்றவர்கள் ஆக்கப்படுகிற வரையில் அது ஏன் காத்திருக்க வேண்டும்? எதையும் செய்வதற்கு மனமற்ற, அக்கறையற்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

இதற்கிடையே, நமது அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் தங்களது படை சார் நலனுக்கு நல்ல வாய்ப்பு உருவாகியிருப்பதாக உணர்ந்து, இலங்கையில் ஆழமாகக் காலூன்றத் தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இறுதியில் சிறிலங்காவினால் நாம் ஒதுக்கப்படும் நிலைக்கு உள்ளாகலாம். நம்மால் வேட்டை நாயுடன் சேர்ந்து வேட்டை ஆடவும் முடியவில்லை, அஞ்சி ஓடும் முயலுடன் சேர்ந்து அதற்கு ஆதரவாக ஓடவும் மனமில்லை." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் இந்திய இராஜதந்திரி ராஜீவ் டோக்ரா

கருத்துகள் இல்லை: