திங்கள், 20 ஏப்ரல், 2009
ஹோசிமின்: சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி
சரித்திரத்திலே பல முறை இறந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்தான். இவர் இறந்து விட்டார் என அறிவித்துவிட்டு எதிரிகள் பட்டாசு கொளுத்தி கொண்டாடுவார்கள்.
ஆனால் பீனிக்ஸ் பறவைகள் போல சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாட்டிலிருந்து இவர் வெளிப்படுவார். ஒன்று இரண்டு முறை அல்ல பலமுறை இப்படி அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார். எதிரிகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவின ஹோசிமின் புத்தபிட்சு பத்திரிகையாளர்கள் என் பல ஆதாரங்களை எடுத்திருக்கிறார்.
இன்றைய கணக்குப்படி அமெரிக்கா நடாத்திய முதலிலும் கடைசியுமான நீண்ட போர் வியட்நாம் போர்தான். அது போல அமெரிக்கா வேறு ஒரு நாட்டிடம் போரில் தோற்றிருக்கிறது என்றால் அது வியட்நாமிடம் தான். வியாட்நாமின் இந்த வீர வரலாற்றுக்குப் பின்னே இருப்பவர் ஹோசிமின்.
1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாக பிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டு வந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் ‘ஒளி தந்தவர்’ என்ற அர்த்தத்தில் இவரை நேசத்துடன் ‘ஹோசிமின்' என்று போற்றினர். பிறகு இதுவே இவரின் பெயராக மாறியது.
ஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாக ஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலின் நின்று பிரான்ஸ் ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப் போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின் வாழ்க்கையை தொடங்கினார்.
உயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டு மக்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.
பிரான்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால் பிரான்ஸின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால் ஜெயிக்க முடியவில்லை. பிரான்ஸை அப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ் நாட்டிற்கு இவர் போனார்.
பாரீஸில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ் மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியை நடத்தினார்கள்; சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோஷம் அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார். இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.
1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்ஸிடம் இருந்து ஜப்பான் கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள் ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த ரட்சகர்கள் என்று போற்றினார்கள். ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின் சொன்னார்.
‘முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது. பிரான்சாக இருந்தாலும் சரி ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார் நம்மை ஆண்டாளும் நமக்குப் பெயர் அடிமைகள் தான். ஆகையால் இந்த இரண்டு பேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்க முடியும் என்று அவர் முழங்கினார்.
ஹோசிமின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்ட ஜப்பான் சும்மா இருக்குமா? ஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியாட்நாமின் அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையை திரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயம் பிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின் ஆட்சியை கைப்பற்றியது.
ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாக தங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தனது தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள்.
மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்து தாமதமாக விழித்துக் கொண்ட பிராஞ்சு படைகளை ஹோசிமின் படைகளோடு மோத முதல் வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்ஸிடம் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன. பிரான்ஸின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமின் கெரில்லா படையோ மிகவும் பலவீனமானது.
அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். ‘உங்களின் படை வீரர்களின் ஒருவரை நாங்கள் கொன்றால் உங்களால் எங்கள் படை வீரர்களில் பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போய்வீர்கள் நாங்கள் ஜெயிப்போம்’ ஹோசிமினின் இந்த வார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனது படைகளை முடுக்கிவிட்டது.
வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட ஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன. இறுதியில் பிரெஞ்சு இராணுவ தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானது நிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.
என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசம் வைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்ஸின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டை வடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்த வியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.
வடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்ஸை ஹோசிமினின் கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்த சமயம்... தெற்கு வியட்நாமின் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம் தீட்டியது.
ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர். அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதை ஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது. இதையடுத்து கம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்ஸ¤க்கு அமெரிக்கா ஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.
இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது! அங்கே விண்ணிலிருந்து சதா குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள்? ஏன் நம் நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்து வீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்கு மூச்சு திணறும்படி தண்ணிகாட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறி ஒருவர் என மூன்று ஜனாதிபதிகள் மாறினர். வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் ‘வெற்றியே குறிக்கோள்’ என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்ஸின் படைகளை எதிர்த்து மூர்க்கத்துடன் போராடியது.
வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டை உருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட... அமெரிக்கா அடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராத திசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.
போரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம் வியட்நாமிலும் உண்மையானது. கம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம் போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக் குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்து வியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.
தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக கட்சியில் அமர்த்திய கைப்பாவை அரசு கம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டு விரட்டி விரட்டிச் சுட்டது.
கம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல் கொல்லப்பட்டனர். இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவான புத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம் காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள்? இவர்களின் போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள் ‘தீக்குளிப்பு’ என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.
கடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில் நேரடியாக குதித்து. தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்ல அதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்து என்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்த கிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.
அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாத ஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டு வைத்தது. போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவான வீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.
எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ஹோசிமினின் படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம். ஆனால் அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியை குலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்க முடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் தப்பி ஓடினர்.
அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த்து ‘சமாதானமாகப் போய் விடலாமே’ என்று தூதுவிட்டது.
நட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்த அமெரிக்காவின் கைபாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.
1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த சமயம் சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்த ஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படி திடீர்என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவை அரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்.
இதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல் வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூட கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில் இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது. இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.
இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளைகுட்டிகளோடு காட்டாற்றில் விழ்ந்தவர்கள் ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் டி.வி.யில் பார்த்த அமெரிக்க மக்கள் ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொண்டனர். அதனால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
ஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்ட நிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படை வீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன்’ என்று பிரசாரம் செய்துதான் ஜெயித்தார்.
என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம் வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துக் கொண்டார். மறுபுறம் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது விமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும் வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.
இரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டி நாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில் லட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள் அனைத்தையும் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் ஒரு காட்சி உறைய வைத்தது.
1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒரு கிராமமே தீப்பற்றி எரிய சொந்தப்பந்தங்கள் என்று எல்லோரையும் கரும விட்டு விட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும் பிசைத்து எடுத்தது. இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார். வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் கடந்த 1997 ஆம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.
இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்பு மனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ள ஆரம்பித்தார்.
வியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து ஹெலிகொப்டர் இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டினர். வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகள் அகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.
இந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்க இராணுவம் வெறுங்கையோடு திரும்ப வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும் ஒரு நாடாக செங்கொடியின் கீழே இணைந்தது. இந்த அபூர்வ காட்சியைப் பார்ப்பதற்காக தனது வாழ்நாளை செலவிட்ட ஹோசிமின் இந்த இணைப்பு நிகழ்வதற்கு சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்றாலும் அந்த நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. ஒன்றாக இணைந்த தங்கள் தேசத்தின் தலைநகர் சைகோனுக்கு இவர்கள் ‘ஹோசிமின் சிட்டி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
முத்தமிழ் வேந்தன்
நாட்றம்பள்ளி
வேலூர் மாவட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக