சனி, 1 ஆகஸ்ட், 2009

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு 2010 ஏப்ரலில் தேர்தல்: வி.உருத்திரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளியாகும் 'தெகல்கா' வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றி தொடர்பில் நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? உலகின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படும் புறநிலை அரசுகளில் இருந்து இது எந்த வகையில் வேறுபட்டு அமைகின்றது?

எமது முயற்சி வெற்றிபெறும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மிகக் கொடூரமான முறையில் சிறிலங்கா அரசு அடக்கி விட்டாலும்கூட, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதிப்பு என்பவற்றுக்கான அவர்களின் வேட்கையை அடக்க முடியவில்லை.

இப்போது, இலங்கையில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளதுடன் மட்டுமல்ல அவர்கள் தமது அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்துவதற்கான வசதிகள் கூடக் கிடையாது. அதனால் தமிழர்களின் அரசியல் போராட்டங்கள் முழுவதும் வெளியில் இருந்தே மேற்கொள்ளப்பட முடியும்.

நாங்கள் உருவாக்க முனைவது புறநிலை அரசு அல்ல. நாடு கடந்த அரசு ஒன்றையே நாம் உருவாக்க உள்ளோம். இதற்கு எந்த ஒரு நாடும் (அதாவது நிலப்பரப்பும்) தேவை இல்லை. இந்த அரசு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே தேர்வு செய்யப்படும்.

இதற்கு முன் எந்தவொரு இனக் குழுவும் இத்தகைய நாடு கடந்த அரசுகளை உருவாக்கியதில்லை. இந்தக் கருத்துருவாக்கமானது அரசியலுக்கும் அரசியல் தத்துவங்களுக்கும் எங்களின் பங்களிப்பாக இருக்கும்.

தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்பார்களா? இந்திய அரசினதும் மாநில கட்சிகளினதும் ஆதரவைக் கோருவீர்களா?

நிச்சயமாக. நாங்கள் அவர்களின் ஆதரவைப் கோருவோம்.

முதலமைச்சர் மு.கருணாநிதியையும் ஏனைய தமிழ் தலைவர்களையும் சந்திப்பதற்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள எண்ணியிருக்கிறீர்களா?

கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், வைகோ, பாண்டியன் மற்றும் ஏனைய தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுவதற்கு எண்ணியுள்ளோம். டில்லியிலும் தமிழ் நாட்டிலும் உள்ள கல்விமான்களையும் சமூகத் தலைவர்களையும் கூட சந்தித்துப் பேசுவதற்கு நாம் எண்ணியுள்ளோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியமானது.

நீங்கள் முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை எப்போது நடத்தப் போகிறீர்கள்? எந்த முறையில் தேர்தல்கள் நடத்தப்படப்போகின்றன?

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்களை நடத்தலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருந்தாலும், நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மக்கள் எங்களைக் கேட்டிருக்கின்றனர். மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஈழத்தை அடைவதற்காக நீங்கள் கொண்டிருக்கக்கூடிய வழிகாட்டு வரைபடம் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசு தான். அதன் சட்டபூர்வ நிலை, புகழ் மற்றும் அனைத்துலக ஆதரவு காரணமாக அது அதிகார மையமாகும். சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையிலான நடுநிலை அதிகாரம் ஒன்றை அது உருவாக்கும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியுடன் வாழக்கூடிய அரசியல் ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு அது தனது பங்களிப்பை வழங்கும்.

இது தொடர்பில் எந்த நாட்டிடம் இருந்தாவது சாதகமான பிரதிபலிப்பு கிடைத்திருக்கிறதா?

இந்த முயற்சிக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு மிக அத்தியாவசியமானது. ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமையும்போது, எங்கள் முயற்சிக்கு ஜனநாயக நாடுகள் ஆதரவு தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இப்போதே சில நாடுகளில் இருந்து சாதகமான பிரதிபலிப்புக்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

http://www.puthinam.com/

முத்தமிழ்வேந்தன்
சென்னை

கருத்துகள் இல்லை: