இந்தியாவில் இருந்து வெளிவரும் 'த வீக்' பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் அதனை நோக்கிய போராட்டத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியில் செல்வராஜா பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:
"பிரபாகரன்தான் எமது தேசியத் தலைவர். தான் நம்பிக்கை வைத்த கொள்கைக்காக தனது வாழ்க்கை முழுவதையுமே வாழ்ந்தவர் அவர். ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமாக தமிழ் மக்களின் நிலத்தை மீட்டு எடுப்பதில் சமரசத்துக்கு இடம் இல்லாத நம்பிக்கை வைத்திருந்தவர் அவர். தனது நோக்கத்தில் இருந்து ஒருபோதுமே அவர் பின்வாங்கியதில்லை. சிறிலங்காப் படை இயந்திரத்தின் அனைத்துச் சவால்களையும் பிரபாகரன் எதிர்நோக்கினார். அனைத்துலகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையால்தான் விடுதலைப் புலிகளின் படை பலத்தை சிறிலங்காப் படையால் முறியடிக்க முடிந்தது.
அரச தலைவர்களும், படை ஜெனரல்களும் மாற்றமடைந்தபோது, மிகவும் குழப்பமான நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். அவர் தனது தாயகத்தில் இருந்துகொண்டே இந்த போரை நடத்தினார். இது ஒரு தற்காப்பு போராகவே இருந்தது. அவர் தமிழர் தாயகத்துக்கு வெளியே போரை கொண்டுசெல்லவோ அல்லது அப்பாவிப் பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகச் செய்யவோ இல்லை. கொள்கையுடைய ஒரு மனிதராக அவர் இருந்தார். தனது இறுதி மூச்சுவரையில் தமிழ் மக்களின் நலன்களிலேயே அவர் கவனமாக இருந்தார். போர் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அனைத்துலக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் ஒரு செயல்திறன் மிக்க படையையும் நடைமுறை ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றையும், நடைமுறை ரீதியான தமிழீழ அரசு ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார்.
சிறிலங்கா அரசு சொல்வது உண்மை என எடுத்துக்கொண்டால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழீழப் போராட்டத்துக்கும் என்ன நடைபெற்றிருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? பலர் சொல்வதைப் போல ஈழக் கனவு முடிவுக்கு வந்துவிட்டதா?
1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை என்ற கருத்துக்கு மக்களின் ஆணை கிடைத்தது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் தமிழர்களின் போராட்டத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. விடுதலைப் புலிகள் படை ரீதியான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது உண்மைதான். 10 ஆயிரத்துக்கும் அதிகமான எமது போராளிகள் சிறிலங்கா அதிகாரிகளினால் அனைத்துலக விதிமுறைகளுக்கு எதிராகத் தடுத்துவைக்கப்படடுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால் தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன், வன்முறையற்ற ஒரு பாதையிலேயே நாம் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எமது போராட்டம் அரசியல் வழிகளிலேயே முன்னெடுக்கப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய அமைப்பாக தொடங்கப்பட்ட போதிலும் இப்போது ஒரு அனைத்துலகப் பிரசன்னத்தை அது கொண்டுள்ளது. இதனை ஒரு அனைத்துலக அமைப்பாக மாற்றியமைத்து அதன் மூலமாக சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.
இதனை ஒரு தோல்வி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு பாரம்பரிய படை என்ற நிலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டீர்களா?
நான் முதலில் குறிப்பிட்டது போல, நிச்சயமாக நாம் படைத்துறை ரீதியாக பின்னடைவு ஒன்றைச் சந்தித்துள்ளோம். நாம் இப்போது அனைத்துத் தமிழர்களும், அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமான அரசியல் பாதை ஒன்றையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில் அனைத்துலக சமூகம் செய்ய வேண்டியது என்ன?
30 வருடங்களுக்கு முன்னர் என்ன காரணத்துக்காக நாம் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினோமோ அது இன்று வரையில் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன்றும் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த சில மாத காலமாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபோது அனைத்துலக சமூகம் மெளனமாகவே இருந்தது.
ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற அது தவறிவிட்டது. தற்போது சிறிலங்காப் படையினரால் கொடூரமாக படை மயப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசின் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்க முடியாத நிலையில் அனைத்துலக சமூகம் உள்ளது.
இந்த அப்பாவித் தமிழர்கள் மீது தமக்குள்ள அக்கறையை அனைத்துலக சமூகம் இப்போது வெளிப்படுத்துவதுடன், அவர்களைப் பாதுகாப்பதில் தமக்குள்ள அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் இப்போதுள்ள அவசரத் தேவை.
http://www.puthinam.com/
முத்தமிழ்வேந்தன்
சென்னை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக